search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்"

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 48). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினம்.

    தற்போது சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஓட்டு பதிவு எந்திரங்கள் உள்ள சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் பணி முடித்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் சென்று கொண்டிருந்தார்.

    மேட்டூர் அருகே நவப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சேர் வேன் எதிர்பாராத விதமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜாதா(46) என்ற மனைவியும் சஞ்ஜய் என்ற மகனும் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

    விபத்து குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் என்.ஜீ.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை(வயது 34). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிமேகலை அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மணிமேகலை நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் நேற்று இரவு மணிமேகலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மணிமேகலை மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்த டாக்டர்கள் மணிமேகலையை பரிசோதனை செய்தபோது அவர் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிமேகலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மணிமேகலை வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

    அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாரா? அல்லது பணி சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தநிலையில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே அத்தியூரில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக அனந்தபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் அத்தியூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் விலகி உயிர் தப்பினார்.

    இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை மடக்கி, டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தச்சம்பட்டை சேர்ந்த செல்வகுமார் மகன் இளையராஜா (வயது 31) என்பதும், அத்தியூர் ஏரியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. 
    மதுரையில் அரசு பஸ்சில் கூட்டத்தை பயன்படுத்திய மர்ம நபர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரிடம் இருந்து 8 பவுன் நகையை திருடிச் சென்றான்.
    மதுரை:

    மதுரை 6-வது பட்டாலியனில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கோவிந்தராஜ் (வயது 45). இவர் சம்பவத்தன்று வேலை நிமித்தமாக அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு மதுரைக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் கோவிந்தராஜ் கைப்பையில் இருந்த 8 பவுன் நகையை நைசாக திருடிக் கொண்டு தப்பினான்.

    எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் வந்திறங்கிய கோவிந்தராஜ் பையை பார்த்தபோது நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஈரோடு அருகே வாகன சோதனையின் போது போலீஸ் அடித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பெரிய அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அருண் குமார் (வயது 18).அருண்குமார் ஈரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    அருண்குமார் கடந்த 5-ந் தேதி மாலை கனி ராவுத்தர் குளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அருண்குமார் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்று விட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து அருண்குமாரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அன்று இரவு அவரது வீட்டுக்கு கருங்கல்பாளையம் போலீசார் ஒருவர் சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்தார்.

    அதன்பேரில் அருண்குமார் தனது பெற்றோருடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் அருண்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று அருண்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அருண் குமாரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அருண்குமாரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரப்ரோடு வழியாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நடந்து சென்று எஸ்.பி.சக்தி கணேசிடம் மனு கொடுத்தனர்.

    எஸ்.பி.சக்தி கணேசன் அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இதனை அடுத்து அருண்குமார் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஈரோடு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது.-

    அருண்குமார் உறவினர்கள் என்னை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் இன்னும் ஆயுதப்படைக்கு மாற்றப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து யாரேனும் வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்திச்செல்வதை தடுக்கும் வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் சோதனைச்சாவடியில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் வழிமறித்து சோதனை செய்தபோது அந்த வாலிபர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகனை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ்முருகனை குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கிக்கொண்டார்.

    உடனே மற்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வானூர் தாலுகா நாவற்குளம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கணேஷ் என்கிற செங்குட்டுவன் (வயது 32) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கணேஷ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    கோவா ஓட்டலில் சூதாடிய காட்சிகளை பேஸ்-புக்கில் பதிவிட்ட புதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சந்திரசேகரன். இவர், கடந்த 18-ந் தேதி விமானம் மூலம் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அங்கு அவர் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார். மேலும், கோவாவில் பிரபலமான (கேசியானா) சூதாட்ட விடுதிக்கும் சென்றுள்ளார்.

    அவர், தான் சென்ற பகுதிகளை படங்களுடன் பேஸ்-புக்கில் பதிவிட்டார். சூதாட்ட விடுதிக்கு செல்வது, வரவேற்பு பெண்களுடன் நிற்பது, சூதாடுவது, வெற்றி பெற்ற அறிவிப்பு திரையில் வருவது போன்றவகளை தனது பேஸ்-புக்கில் பதிவிட்டுள்ளார்.



    ஒரு போலீஸ் அதிகாரி சுற்றுலா சென்று சூதாடி கொட்டமடித்திருப்பது புதுவை காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மீது புதுவை காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

    சமூக வலைத்தளத்தை நல்ல வி‌ஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மீறி செயல்பட்டால் ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகியுள்ளது. #tamilnews
    தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் வைத்து முதியவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமக்குடி:

    காவல்துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகங்கள் போலீஸ் நிலையங்களிலும், பொது இடங்களிலும் எழுதப்பட்டிருப்பதை அடிக்கடி நாம் பார்த்திருக்கலாம்.

    ஆனால் தற்போது ஒரு சில போலீசார் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் மேற்கண்ட வாசகம் சரிதானா? என்று எண்ணத்தோன்றுகிறது.

    குறிப்பாக வாகன ஓட்டிகளிடமும், அப்பாவி மக்களிடமும் போலீசார் காட்டும் கெடுபிடிகள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றன. இதை தட்டிக் கேட்டால் பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்துவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    இதே போல் ஏராளமான சட்ட மீறல்களிலும் ஒரு சில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் இதுபோன்ற செயல்களால் ஓட்டுமொத்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.

    இதனிடையே தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் முதியவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் முனியசாமி. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்.

    மேலும் ஜோசியத்திலும் இவருக்கு அதீத நம்பிக்கை உண்டு. பரமக்குடியில் கடை வாசலில் அமர்ந்து 50 வயது மதிக்கத்தக்க முதியவர் குறி சொல்லிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி தான் விரைவில் ஓய்வு பெற உள்ளதாகவும், எனவே எதிர்காலம் எப்படி இருக்கும் என்று குறி கேட்டுள்ளார்.

    அவரது கையை பார்த்து குறி சொன்ன அந்த முதியவர், உங்களுக்கு அரசின் பணப்பலன்கள் கிடைக்க கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் மேலும் சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி பொது இடத்திலேயே குறி சொன்ன அந்த முதியவரை மனிதாபிமான மின்றி செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மட்டும் தான் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை தடுக்க வில்லை.

    ஆத்திரம் தீர முதியவரை தாக்கிய பின் முனியசாமி அங்கிருந்து கிளம்பினார்.

    இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் பதிவேற்றினர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முதியவரை அற்ப காரணத்துக்காக செருப்பால் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரியவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.  #tamilnews

    ×